"பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் இந்தியா எங்கேயோ போயிருக்குமே...!":ஆர்.எஸ்.எஸ் ஆதங்கம்
புதன், 22 பிப்ரவரி 2012 (19:38 IST)
பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் அதன் கீழ் இந்தியா இன்னும் சிறப்பான நிலையை எட்டியிருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
"செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ள பகவத், அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
"கடந்த 64 ஆண்டு காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறிது காலத்திற்கேனும் பதவியில் இருந்துள்ளன.ஆனால் நிலைமையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. எனவே எங்கே தவறு நிகழ்ந்தது? என்று குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் மோகன் பகவத் மேலும் கூறியுள்ளார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு ஒருபுறம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளபோதிலும், மறுபுறம் "அனைத்து கட்சிகளும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியையும் சேர்த்து என்பதால், பா.ஜனதாவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.