கருணை மனுக்கள் மீது தாமதம் ஏன்? மத்திய,மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி

புதன், 22 பிப்ரவரி 2012 (13:21 IST)
தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடிப்பதில் தாமதம் ஏன் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.

இது தொடர்பாக தங்களிடம் உள்ள கருணை மனுக்கள் தொடர்பான ஆவணங்களை இன்னும் மூன்று தினங்களுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கருணை மனுக்கள் விடயத்தில் கடந்த 30 ஆண்டுகளில் பதவி வகித்த குடியரசு தலைவர்களிலேயே, தற்போதைய குடியரசு தலைவரான பிரதிபா பாட்டீல்தான் கருணை மனுக்கள் மீது அதிக பரிவு காட்டியவராக திகழ்கிறார்.

பிரதிபா பாட்டீலுக்கு 31 பேர் கருணை மனு அனுப்பி இருந்தனர். அதில் 23 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ள பிரதிபா பாட்டீல், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்டவர்களுக்கு கருணை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்