ஜெ.வுக்கு சாதகமாக சசிகலா சாட்சியம்; நீதிமன்றத்தில் கதறி அழுகை!

சனி, 18 பிப்ரவரி 2012 (19:45 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்த சசிகலா, ஒருகட்டத்தில் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா ஏற்கனவே நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார்.

அவர் அளித்த சாட்சியத்தின்போது வரவு செலவு குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும், சசிகலாதான் எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்ததார் என்றும் கூறியதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவை தொடர்ந்து சசிகலா இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது வங்கி கணக்கு வழக்கு விவரங்கள் குறித்து ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியாது என்றும்,காசோலைகளில் கையெழுத்து மட்டுமே அவர் போடுவார்; தாம்தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டதாகவும் சசிகலா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கியபோது சசிகலா கதறி அழுததாகவும், பின்னர் தம்மை தேற்றிக்கொண்டு மென்மையான குரலில் பதிலளித்ததாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்