முல்லை பெரியாறு:மத்திய படையை நிறுத்த பிரதமர் மறுப்பு
செவ்வாய், 13 டிசம்பர் 2011 (20:15 IST)
முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக மத்திய படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார்.
முல்லை பெரியாறு அணையை உடைக்கப்போவதாக கூறி கேரள இளைஞர் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் அணை பகுதிக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை வழக்கம்போல் பிரதமரோ அல்லது மத்திய அரசு தரப்பிலோ பதில் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம், கேரளா இடையேயான பதற்றத்தை தணிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும்,அணையின் பாதுகாப்புக்கு கேரள போலீசாருக்கு பதிலாக மத்திய படையை நிறுத்த வேண்டும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று நேரில் வலியுறுத்தினர்.
ஆனால் அவர்களது கோரிக்கையை பிரதமர் நிராகரித்துவிட்டார்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பணியில், கேரள அரசு கோரிக்கைவிடும் வரை அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.