என்னை கொண்டு செல்ல உங்களது தனி விமானத்தை லண்டனுக்கு அனுப்புங்கள் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பதிலடி கொடுத்துள்ளார்.
2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்கள் நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களில் மாயாவதி பற்றிய தகவல்களை "விக்கிலீக்ஸ்' இணைய தளம் வெளியிட்டிருந்தது.
அதில், "புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்" என்று குறிப்பிட்டிருந்தது.
இது குறித்த செய்தி நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் "விக்கிலீக்ஸ்" வெளியிட்ட இந்த செய்தி குறித்து மாயாவதியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது,"விக்கிலீக்ஸ்" நிறுவனர் அசாஞ்சேவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை ஆக்ராவில் உள்ள மனநல மையத்தில் சேர்க்க வேண்டும் என்றும் காட்டமாக கூறினார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் தவறானவை.அடிப்படை இல்லாதவை என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் மாயாவதியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அசாஞ்சே,"என்னை கொண்டு செல்ல உங்களது தனி விமானத்தை லண்டனுக்கு அனுபினால் அதனை நான் வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் மாயாவதி பகுத்தறிவு எண்ணத்திற்கு துரோகம் இழைப்பதாகவும் அசாஞ்சே குற்றம்சாட்டியுள்ளார்.