லோக் அயுக்தா அறிக்கையை எதிர்த்து எடியூரப்பா வழக்கு

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2011 (18:20 IST)
கர்நாடக மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக எஃகுச் சுரங்கங்கள் அமைக்க அனுமதித்ததில் பலன் பெற்றார் என்று அம்மாநில லோக் அயுக்தா எனப்படும் மக்கள் நீதிமன்றத்தால் குற்றஞ்சாற்றப்பட்டு, அதனால் பதவி இழந்த எடியூரப்பா, லோக் அயுக்தா அறிக்கைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனக்கு எதிராக அறிக்கை அளித்துள்ள லோக் அயுக்தா, தன் மீது சுமத்திய குற்றச்சாற்றுக்கு பதிலளிக்க எந்த வாய்ப்பும் தரவில்லை என்றும், எனவே அந்த அறிக்கை செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டும் என்று எடியூரப்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளது.

தனது குடும்பத்தினர் நடத்திவரும் பிரிராணா அறக்கட்டளைக்கு சுரங்க நிறுவனங்கள் இரண்டு முறையே ரூ.10 கோடி, ரூ.20 கோடி நன்கொடை கொடுத்ததாக லோக் அயுக்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கையில் கூறப்பட்டுள்ள அந்த இரண்டு நிறுவனங்களும் சுரங்கத் தொழிலில் இல்லை என்று தனது மனுவில் எடியூரப்பா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக சுரங்கங்கள் நடத்திவருவது குறித்து புலனாய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மட்டுமே லோக் அயுக்தாவிற்கு அரசு வரையறை நி்ர்ணயித்திருந்தது, ஆனால் அதனைத் தாண்டி அது செயல்பட்டு அறிக்கை அளித்துள்ளது என்றும், அறக்கட்டளைக்கு நன்கொடை வாங்குவது தொடர்பாக விசாரிக்க அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

எடியூரப்பாவின் மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்