கடுமையான லோக்பால் சட்டத்துக்காக சாகும் வரை போராடத் தயார் என்று காந்தியவாதி அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.
லோக்பால் சட்டத்தின் மூலமாக பிரதமர், சி.பி.ஐ., உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரையும் விசாரிக்க வழி செய்யுமாறு அண்ணா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், பிரதமர் உள்ளிட்டோரை ஊழல் புகார்களில் விசாரிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே, பிரதமர், எம்.பி.க்கள், சி.பி.ஐ. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை தவிர மற்றவர்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கொண்டு வருகிறது. இதற்கு ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மிக கடுமையான விதிகள் அடங்கிய லோக்பால் சட்டத்துக்காக சாகும் வரை போராட தயாராக இருப்பதாகவும், ராம்தேவ் போராட்டத்தை போல எனது போராட்டத்தை மத்திய அரசு அடக்க முடியாது என்றும் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 16ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.