பிரணாப் உளவு பார்க்கப்பட்டது குறித்து விசாரணை தேவை: பா.ஜனதா

புதன், 22 ஜூன் 2011 (17:20 IST)
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவிகள் வைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளங்களை சூயிங்கம் பசை என மத்திய புலனாய்வு அமைப்பு கூறுவது பெரிய நகைச்சுவை என்றும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அக்கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மேலும் தெரிவித்ததாவது:

பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தை உளவுபார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் கடுமையான விவகாரம்.நிதி அமைச்சரும் அந்த குற்றச்சாட்டை நிராகரிக்க முயற்சிக்கிறார். அவருக்கு சில நெருக்கடிகள் இருக்கின்றன.ஆனால் என்ன நடந்தது என்று இந்த நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது.

மத்திய புலனாய்வு அமைப்பின் சூயிங்கம் கோட்பாடு பெரிய நகைச்சுவை. இதுபோன்ற குழந்தைத்தனமான வாதத்தை அளித்துவிட்டு அதை நம்ப வேண்டும் என்றால் மக்கள் சிரிப்பார்கள். மேலும் தானாகவே சென்று ஒட்டிக்கொள்ளும் புலனாய்வு சூயிங்கம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்புவார்கள்

பிரதமருக்கு பிரணாப் கடந்த செப்டம்பர் மாதம் எழுதியுள்ள கடிதத்தில் தனது அலுவலகத்தில் 16 இடங்களில் உளவுக் கருவிகள் வைக்கப்பட்டிருந்ததற்கான பசை இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தை கடுமையாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகளால் இரண்டு கேள்விகள் எழுந்துள்ளது.மத்திய அரசு தனது நிதி அமைச்சருக்கு எதிராக உளவு பார்த்ததா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் அதைச் செய்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.எப்படி பார்த்தாலும் இது கடுமையான விவகாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்