பண விவகாரம்: சாய்பாபா அறங்காவலர்களுக்கு தாக்கீது

புதன், 22 ஜூன் 2011 (13:57 IST)
வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சாய்பாபா அறங்காவலர்கள் இரண்டு பேர்களுக்கு ஆந்திர காவல்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.

கடந்த் இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடக எல்லை அருகே கொடிகொண்டா சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான வாகனத்தில் ரூ 35.5 லட்சம் பணம் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த பணம் சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான பணமாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர், இதுதொடர்பாக ஏற்கனவே 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர்களும், சாய்பாபாவின் உறவினர்களுமான ரத்னாகர் ராஜு மற்றும் சத்யசாய் அறக்கட்டளையின் உறுப்பினர் வேணு சீனுவாசன்2 பேருக்கு ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் தாக்கீது அனுப்பியுள்ளனர்.

இதனிடையே அந்த இருவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அறக்கட்டளையின் பணம் வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்படுவது குறித்தும், அரசியல்வாதிகள் சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளது குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாநில அமைச்சர் ஒருவரும், மத்திய அமைச்சரின் மகன் ஒருவரும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பக்தர்கள் சந்தேகப்படுவதாக அக்கட்சி மேலும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்