2 ஜி ஊழல்: ராசாவை முக்கிய குற்றவாளியாக்க கோரி சுப்ரமணியம் சுவாமி மனு

புதன், 15 டிசம்பர் 2010 (13:43 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவை முக்கிய குற்றவாளியாக ஆக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி டிஸ் ஹஜாரி நீதிமன்றத்தில், ராசாவை 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாக ஆக்க கோரி தாம் மனு தாக்கல் செய்துள்ளதாக சுவாமி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2 ஜி ஊழல் வழக்கில் அடையாளம் தெரியாதோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக சிபிஐ, தமக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாக கூறிய சுவாமி, முதல் தகவல் அறிக்கையில் அவர்கள் (சிபிஐ) ராசா பெயரை சேர்க்காமல் இருந்ததாகவும், இன்று தாம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது ராசா பெயர் சேர்க்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே 2 ஜி வழக்கில் தம்மை அரசு வழக்கறிஞராக நியமிக்க கோரி சிபிஐ சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தாவிடம் சுவாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்கலாம் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள சுவாமி, விசாரணையில் சிபிஐ தனக்கு உதவிபுரிய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்