2ஜி அலைக்கற்றை முறைகேடு - 119 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது: கபில் சிபல்

திங்கள், 29 நவம்பர் 2010 (20:57 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதில் அதற்குரிய தகுதிகள் தொடர்பான விவரங்களை மறைத்தது, செல்பேசி சேவை தொடங்குவதற்கான வழி முறைகளை கடைபிடிக்காதது ஆகிய காரணங்களின் அடிப்படையில் 119 நிறுவனங்களுக்கு விளக்கம் கோரி தாக்கீது அனுப்பப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசு முடிவு செய்துள்ள நடவடிக்கையை விளக்கி டெல்லியில் இன்று தனது அமைச்சகத்தின் துணை அமைச்சர் சச்சின் பைலட்டுடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கபில் சிபல் இவ்வாறு கூறியுள்ளார்.

“2ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதில் சில நிறுவனங்கள் உண்மையை மறைத்திருக்கலாம், அதனை பெறுவதற்கு சில வழிமுறைகளை கடைபிடித்திருக்கலாம்” என்று கருதுவதால் அவர்களிடம் விளக்கம் கேட்டு இந்தத் தாக்கீதை அனுப்ப முடிவு செய்துள்ளதாக கபில் சிபல் கூறியுள்ளார்.

இந்த 119 நிறுவனங்களில் 81 நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றை சேவை நடத்துவதற்கான தகுதியை பெறாதவை என்று்ம, 38 நிறுவனங்கள் செல்பேசி சேவை தொடங்குபோது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கடைபிடிக்காதவை என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.

அடுத்த 60 நாட்களில் அவர்கள் அரசின் தாக்கீதுக்கு பதிலளிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பதிலைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்