அயோத்தி தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு உ.பி. அரசுக்கு தான் உள்ளது: காங்கிரஸ்

வெள்ளி, 1 அக்டோபர் 2010 (20:09 IST)
அயோத்தி தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு உத்தரபிரதேச மாநில அரசுக்குத்தான் உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியிடம், அயோத்தி தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், சர்ச்சைக்குரிய அந்த நிலம் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது என்பதால் அது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்றார்.

இந்நிலையில், இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெர்வேஷ் ஹஷ்மியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு உத்தரபிரதேச மாநில அரசுக்கு தான் உள்ளது என்றார்.

தீர்ப்பை தங்களால் நிறைவேற்ற இயலாது என்று மாநில அரசு சொன்னாலோ அல்லது மாநில அரசால் தீர்ப்பை நிறைவேற்ற இயலாது என்று மத்திய அரசு கருதினாலோ அல்லது முதலமைச்சர் ராஜினாமா செய்தாலோ தான் இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்