பழங்குடியினர் உரிமை, பசுமை விதிகளை மீறுகிறது வேதாந்தா: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாற்று

சனி, 13 மார்ச் 2010 (16:21 IST)
ஒரிசாவில் சுரங்கம் அமைத்து கனிம வளங்களை எடுக்க அரசு அனுமதி வழங்கிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ், பழங்குடியினர் உரிமைகளையும், பசுமை விதிகளையும் தாறுமாறாக மீறியுள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் - வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

ஒரிசாவில் பழங்குடியினர் அதிகமாக வாழும் வனப்பகுதிகளில் உள்ள வனங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுக்க ரூ.50,000 கோடிக்குக் குத்தகை எடுத்துள்ளது வேதாந்தா ரிசோர்சஸ். நியாம்கிரி என்ற மலைப் பகுதியில் வேதாந்த நிறுவனம் சுரங்கங்களை அமைத்து அலுமினியம், இரும்புத் தாதுக்களை எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பழங்குடியினரும், மனித உரிமை அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “பழங்குடியினரின் உரிமைகள் குறித்து சற்றும் கவலைப்படாமல் அவர்கள் (வேதாந்தா ரிசோர்சஸ்) வன உரிமைகள் சட்டத்தை மீறியுள்ளனர். பழங்குடியினர் உரிமைகளில் மட்டுமின்றி, பசுமை விதிகளையும் மீறியுள்ளனர்” என்று குற்றம் சாற்றியுள்ளார்.

ஒரிசாவில் நடைபெற்றுவரும் பல்வேறு சுரங்க நிறுவனங்களின் செயல்முறைகளை ஆராய்ந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவையின் நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நியாம்கிரி மலைப்பகுதியில் சுரங்கம் அமைத்து செயல்பட்டுவரும் அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோசர்ஸ் எல்லா விதிமுறைகளையும் மீறியுள்ளது என்று கூறியுள்ளார்.

சுரங்கத் திட்டங்களுக்கு எதிராக அம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும், அவைகளுக்கு எதிரான வேதாந்த நிறுவனமும் பத்திரிக்கைகளில் விளம்பரப் போர் நடத்திவருவதையும் அமைச்சர் ரமேஷ் கண்டித்துள்ளார்.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா ரிசோசர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமைச்சராவதற்கு முன்னர் ப.சிதம்பரம் உறுப்பினராக இருந்தார் என்றும், அவர் அமைச்சரானதற்குப் பிறகு அவருடைய மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்படுவதுண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்