கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு: பெட்ரோல் விலை உயர்த்துவதில் சிக்கல்?

வியாழன், 11 பிப்ரவரி 2010 (16:31 IST)
பெட்ரோலியப் பொருட்களின் விலையை சர்வதேச சந்தைக்கு இணையாக நிர்ணயிப்பது பற்றி இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை சர்வதேச சந்தைக்கு இணையாக உயர்த்தலாம் என பாரிக் கமிட்டி அளித்த அறிக்கையைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்படும் என செய்திகள் வெளியானது.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய 2 முக்கிய கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பெட்ரோல் விலையை உயர்த்துவது பற்றி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரையும், வீட்டு உபயோக சமையை எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.25ம் உயர்த்துவதற்கு நிதியமைச்சர் பிரணாப், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தயாராக இருந்த போதிலும், கூட்டணிக் கட்சிகள் டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு விலையை உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து வரும் 14ஆம் தேதி பிரணாப்-முரளி தியோரா சந்திப்பு நடத்த உள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்