தெலங்கானா: ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் - ப.சிதம்பரம்

செவ்வாய், 5 ஜனவரி 2010 (13:42 IST)
புதுடெல்லி: தெலங்கானா குறித்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் தெலங்கானா பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தெலங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி உதவ வேண்டும். ஆந்திராவில் நடத்தப்பட்டு வரும் முழு அடைப்புகள், சாலை மறியல்கள், வன்முறை போன்ற போராட்டங்களை நிறுத்த வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். தெலங்கானா பிரச்சினையில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக கூறுவது தவறானது. அரசியல் கட்சிகளிடம் கலந்து பேசவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

இப்பிரச்சினையைத் தீர்க்க அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அப்படி உருவானால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதற்கு ஆந்திர கட்சிகள் மத்திய அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்