தெலங்கானா: விரிவான ஆலோசனை அவசியம் - ப. சிதம்பரம்

வியாழன், 24 டிசம்பர் 2009 (12:31 IST)
தெலங்கானா குறித்த பிரச்சினையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொடர்புடைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் விரிவான பேச்சுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சூழலைத் தொடர்ந்து இந்த ஆலோசனை அவசியமாகிறது என்று புதுடெல்லியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ப. சிதம்பரம் கூறினார்.

இப்பிரச்சினையில் பல அரசியல்கட்சிகளும் மாறுபாடான கருத்துகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ப. சிதம்பரம், அனைத்து தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளின் உணர்வுகளும் இப்பிரச்சினையில் இடம்பெற்றிருப்பது குறித்து மத்திய அரசு அவர்களின் கருத்துகளை அறியவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் மீண்டும் ஏற்பட வேண்டியது அவசியம் என்றும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் ரோசையா கடந்த 7ஆம் தேதியன்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெலங்கானா மாநிலம் அமைவதற்கு ஒப்புக்கொண்ட பிறகே அதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது என்றும் அமைச்சர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்