மோசமான வானிலையிலும் விமானத்தை இயக்க நிர்பந்திக்கப்படும் விமானிகள்

சனி, 5 செப்டம்பர் 2009 (15:03 IST)
மோசமான வானிலை காரணமாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பணி விதிமுறைகளை விமானிகள் சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், மோசமான வானிலை நிலவும் காலத்திலும், வி.வி.ஐ.பி.க்களின் ஹெலிகாப்டர் அல்லது விமானத்தை இயக்க விமானிகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற புதிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக, வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டரை இயக்க மறுத்த விமானி, சம்பந்தப்பட்ட முதல்வரின் கோபத்திற்கு உள்ளாகி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களை இயக்க நியமிக்கப்படும் விமானிகளை அம்மாநில அரசுதான் தேர்வு செய்கிறது. இதனால், மோசமான வானிலை நிலவும் காலத்தில் விமானத்தை அவர்கள் இயக்க மறுத்தால், அவர்களின் வேலை பறி போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் என்றால், விமானம் அல்லது ஹெலிகாப்டரின் திறனை ஒரு சில விமானிகள் மிகவும் உயர்வாக கருதுவதால், மோசமான வானிலையிலும் அதனை இயக்குகின்றனர்.

மலைப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானி ஒருவர் மோசமான வானிலையிலும் ஹெலிகாப்டர்களை இயக்கத் துணிந்தவர். 2 முறை மோசமான வானிலையில் வி.வி.ஐ.பி.க்களின் ஹெலிகாப்டரை அவர் வெற்றிகரமாக இயக்கியதால், வி.வி.ஐ.பி.க்கள் மத்தியில் அவருக்கான மவுசு அதிகரித்தது.

ஆனால், 3வது முறை மோசமான வானிலையில் ஹெலிகாப்டரை இயக்கிய போது அவரது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் அதுவே அவருக்கு கடைசி பயணமாக அமைந்து விட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத விமான போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிர்வாகம் அல்லது வி.வி.ஐ.பி.க்களின் வற்புறுத்தலை ஏற்று மோசமான வானிலையில் விமானத்தை இயக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தொடர்ந்து விமானிகளுக்கு வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு முழுமையான பலன் கிடைக்கிறதா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை விஷுவல் ஃப்ளைட் ரேஞ்ச் (visual flight range-VFR) எனப்படும் பார்வைக்கு உட்பட்டு விமானம் அல்லது ஹெலிகாப்டரை இயக்க விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக தகவல் தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியுடன் விமானத்தை இயக்கவே பெரும்பாலான இந்திய விமானிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மோசமான வானிலை நிலவும் காலத்தில், விமானம் அல்லது ஹெலிகாப்டரின் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் VFR முறையில் விமானத்தை இயக்குவதைத் தவிர விமானிகளுக்கு வேறு வழியில்லை. அப்போதுதான் விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் மறுக்க முடியாது உண்மை.

ராஜசேகர ரெட்டி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கிய ஹெலிகாப்டர் பைலட் பாட்டியா, துணை பைலட் எம்.எஸ்.ரெட்டி ஆகியோருக்கு விபத்து நடைபெற்ற தினத்தன்று மோசமான வானிலை நிலவுவதாக எச்சரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எச்சரிக்கைக் கடிதத்தில் காலை 6.40 மணியளவில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் காலை 8.30 மணிக்கு ஆந்திர முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரை விமான இயக்கியுள்ளார். இதில் பைலட்டின் மெத்தனப்போக்கு காரணமா? அல்லது மோசமான வானிலையிலும் அவர் ஹெலிகாப்டரை இயக்க நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்பது நேர்மையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

உண்மை தெரிந்தாலும், ஆந்திர மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்ற முதல்வர் ராஜசேகர ரெட்டியும், அவருடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 4 பேரும் மீண்டும் உயிர் பெறுவார்களா...

வெப்துனியாவைப் படிக்கவும்