குஜராத்தில் ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு தடை நீக்கம்
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (15:35 IST)
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங்கின் ஜின்னா குறித்த புத்தகத்திற்கு குஜராத் மாநில அரசு விதித்திருந்த தடையை அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.
`ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்' என்ற தலைப்பில் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தால், மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஜஸ்வந்த் சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தை விற்பனை செய்வதற்கு தடை விதித்து நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டது.
இந்த தடையை எதிர்த்து குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் அகில் குரேஷி, கே.எம். தாக்கர் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் புதிதாக அரசு அறிவிக்கை வெளியிடுவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
புதிய அறிவிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
ஜஸ்வந்த் புத்தகத்திற்கு குஜராத் அரசு விதித்த தடையை எதிர்த்து மனிஷ் ஜானி, பிரகாஷ் ஷா ஆகிய இருவரும் தாக்கல் செய்த மனுவில், புத்தகத்தில் சர்தார் வல்லபாய் படேல் குறித்து ஜஸ்வந்த் சிங் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளாமலேயே தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்தால் மத வன்முறை ஏற்படும் என்பதை ஏற்க முடியாது என்றும் மனுதாரர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்கி உத்தரவிட்டனர்.