பாகிஸ்தானிடம் அதிகளவில் அணு ஆயுதம்: இந்திய ராணுவத் தளபதி
புதன், 2 செப்டம்பர் 2009 (17:28 IST)
பாகிஸ்தான் அரசு அளவுக்கு அதிகமாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதாக அமெரிக்கா வெளியிட்ட தகவல் உண்மையாக இருந்தால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு நெருக்கடி ஏற்படும் என இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூர் எச்சரித்துள்ளார்.
கராச்சிக்கு அருகே அணு ஆயுத ஏவுகணைகளைப் பாகிஸ்தான் அரசு குவித்து வைத்துள்ளதாக குற்றம்சாற்றியுள்ள அமெரிக்கா அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படங்களையும் தந்ததாக செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தான் அரசு தனது அணு ஆயுத பலத்தை தொடர்ந்து அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் புளுடோனியத்தை தயாரிக்க உதவும் அணு உலைகளையும் பாகிஸ்தான் தயார் செய்துள்ளதாக அமெரிக்க அணு விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், புனேவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூர், பாகிஸ்தான் தனது அணு ஆயுத வல்லமையை அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்த தகவல்கள் உண்மையானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது பாதுகாப்பிற்காக ஒரு நாடு தயாரிக்கும் அளவு ஆயுதங்களை விட பாகிஸ்தான் அதிகளவில் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தானின் அணு ஆயுத தயாரிப்பு பணி தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு விரிவடைந்துள்ளது என்று கருதுவதாகக் கூறினார்.