இந்தியா-பாக். கூட்டறிக்கை: பிரதமருக்கு காங்கிரஸ் ஆதரவு

ஞாயிறு, 26 ஜூலை 2009 (10:08 IST)
பிரதமர் மன்மோகன் சிங்-கிலானி இடையே எகிப்தில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை பிரச்சினையில், பிரதமருக்கு ஆதரவான நிலையை காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ளது.

எகிப்தில் வெளியான கூட்டறிக்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்ட வாசகங்களை இரு நாட்டு அதிகாரிகளும் இரு பொருள்பட விளக்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம், சோனியா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், கூட்டறிக்கை பிரச்சனையில் பிரதமர் மன்மோகன்சிங் நிலையை கட்சி ஆதரிக்கும் என்று சூசகமாக தெரிவித்தார்.

இதற்கிடையில், கூட்டறிக்கை விவகாரத்தில் அரசின் நிலை குறித்து வருகிற 29ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்