இந்தியா-பாக். கூட்டறிக்கையால் மோதல் இல்லை: மன்மோகன் சிங்

சனி, 25 ஜூலை 2009 (13:53 IST)
இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை விவகாரத்தால் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கும், சமரச பேச்சு வார்த்தைக்கும் தொடர்பு இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்ததற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கூட்டறிக்கையில் இடம்பெற்றிருந்த இந்த அம்சம், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில், கூட்டறிக்கை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கூட்டறிக்கையால் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசுக்கும், காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்