கோத்ரா தீவைப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரம் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை அகமதாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன்மூலம் குஜராத் கலவரம் தொடர்பாக மோடியிடம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
ஜாகியா ஜாப்ரி என்பவரது புகாரைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கலு மலிவாட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி டி.ஹெச். வகேலா, சிறப்பு விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் செயல்படுவதால், அந்த குழுவிற்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று கூரினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ராவிற்குப் பிந்தைய கலவரத்தின் போது, குல்பர்க் சொசைட்டி பகுதியில் ஜாகியாவின் கணவர் ஈஷான் ஜாப்ரியும், வேறு 39 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்திற்கு முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்க்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் தூண்டி விட்டதாக ஜாகியா தனது புகாரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அளித்த புகாரில் மலிவாட்டின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும், மோடி உட்பட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எவரையும் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மலிவாட் தனது மனுவில் கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, ஜாகியாவின் புகார் குறித்து ஆய்வு செய்யுமாறு மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சிறப்பு விசாரணைக் குழுவின் வழக்கறிஞர் கே.ஜி. மேனன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாகியா அளித்த குற்றச்சாற்றுகள் உண்மையானத என்பதை கண்டறிவதாகும் என்று வாதாடினார்.
துவக்க விசாரணை மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், அதனை தாங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தாங்கள் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.