சச்சார் கமிட்டி பரிந்துரைகள், மொராதாபாத் தொகுதியின் பல்வேறு பிரச்சினைகள், விளையாட்டு அமைப்புகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் காங்கிரஸ் எம்.பி-யுமான அசாருதீன் முதல்முறையாக மக்களவையில் பேசினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேனாக விளங்கிய அசாருதீன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
அவர் மக்களவையில் 2009-10ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று தமது கன்னிப்பேச்சை ஆற்றினார்.
சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு ஆயிரத்து 740 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதை அசாருதீன் பாராட்டினார்.
சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு இணையாக முஸ்லிம் மக்களை மேம்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமது மொராதாபாத் தொகுதியில் பித்தளை தொழிலில் ஈடுபட்டு, தற்போதைய பொருளாதார சரிவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கலைஞர்களுக்கு உதவ மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.