சர்தாரியை புண்படுத்த நினைக்கவில்லை : மன்மோகன்

சனி, 11 ஜூலை 2009 (14:08 IST)
ரஷ்யாவில் பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரியிடம் , ஊடகங்கள் முன்னிலையில் தாம் கடுமையாக பேசியது அவரை புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் எக்தரின் பர்க் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாடு ஒன்றிற்கு சென்றிருந்த மன்மோகன் , பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்தபோது , ஊடகங்கள் முன்னிலையிலேயே, " பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்துங்கள் " என்று கடுமையாக கூறினார்.

இதனால் சர்தாரிக்கு தர்மசங்கடமாகிவிட்டது.பின்னர் பாகிஸ்தான் தரப்பில் , ஊடகங்களுக்கு முன்னால் மன்மோகன் இவ்வாறு கூறியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் , இத்தாலியில் நடைபெற்ற ஜி 8 மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு , இன்று டெல்லி திரும்பிய மன்மோகன் சிங் , விமானத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர் , ரஷ்ய சம்பவத்தை நினைவுபடுத்தி , " நீங்கள் இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டது பாகிஸ்தான் தலைவர்களிடத்தில் சாதகமான விளைவுக்ளை ஏற்படுத்தியுள்ளதா ? " எனக்கேட்டார்.

அதற்கு பதிலளித்த மன்மோகன் , தாம் வேண்டுமென்றே சர்தாரியை புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை என்றும் , அங்கே ஊடகங்கள் இருப்பதையே தாம் மறந்துவிட்டதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்