வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
2009-10 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி,
வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் கடன் பெற்று இரண்டு ஹெக்டேருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்களது கடனில் 75 சதவிகிதத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் 2009, ஜூன் 30 தேதியிலிருந்து 2009 டிசம்பர் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பருவ மழை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் தனியாரிடமிருந்து கடன் பெற்றிருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தில் இந்த விவசாயிகள் இணைக்கப்படாததால் இந்த பிரச்சனை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்று கூறினார்.