மத்திய அரசின் 2009-10ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உலக அளவிலான பொருளாதார சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9 விழுக்காட்டை எட்டும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளதாக புதுடெல்லியில் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் கூறினார்.
கிராமப்புற மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட் என்று கூறிய அவர், குறுகிய கால பொருளாதார தேவையை வெளிப்படுத்தும் வகையிலும், நடுத்தர கால அளவு இலக்குகளை எட்டும் வகையிலும் அமைந்துள்ளது என்றார்.
நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதன் மூலம் சிறப்பான பணியை செய்திருப்பதாக பிரதமர் பாராட்டினார்.
தற்போதைய சூழ்நிலையில் உலகளாவிய பொருளாதார தேக்க நிலையின் பாதிப்புகளை இந்தியாவில் குறைக்க வேண்டியது அவசியம் என்றும், அதனடிப்படையில் 8 முதல் 9 விழுக்காடு வளர்ச்சியை எட்டும் வகையிலும் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
வளர்ச்சிக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் நகர்ப்புற புனரமைப்புத் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் அவசியமான ஒன்று என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.