ஆஸி. தாக்குதல் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள், 29 ஜூன் 2009 (12:36 IST)
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான பிரச்னையை மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வார காலத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதல் குறித்தும், தாக்குதல் இனிமேல் நடைபெறாதவாறு தடுத்து நிறுத்த எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்யுமாறு இந்த மாத துவக்கத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது , ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இன்னும் நிற்கவில்லை என்றும், இந்த பிரச்னையை ஜமுக்காளத்திற்குள் நாம் மறைத்துவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கூறினர்.
ஆஸ்ட்ரேலியா மற்றும் கனடாவிலுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வான்வதி, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த ஆஸ்ட்ரேலிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
ஆனால் அவரது இந்த பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், இது தொடர்பாக மேலும் ஒரு விரிவான பதில் மனுவை இரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.