பாகிஸ்தானில் கடந்த 1990ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியரான சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற இந்திய அரசு தலையிட வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரப்ஜித் சிங் அப்பாவி என்றும், அவரை விடுவிக்க பாகிஸ்தான் அரசுடன் மத்திய அரசு பேசி முயற்சிக்க வேண்டும் என்றும் சரப்ஜித்தின் மனைவி சுக்பிரீத் கவுர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது கணவர் அப்பாவி என்று இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்திய அரசு வலியுறுத்துமானால் தமது கணவர் காப்பாற்றப்படுவார் என்றார்.
இந்திய அரசு இனிமேலும் மவுனத்தைக் கடைபிடிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
சரப்ஜித் சிங்கின் மகள்கள் ஸ்வபன்தீப், பூனம் ஆகியோர் கூறுகையில், தங்களது தந்தையின் மனு மீதான விசாரணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நல்ல முடிவை அளிக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும், ஆனால் அவரது கருணை மனு தள்ளுபடியானதால் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டனர்.