மும்பை தாக்குதல்: விசாரணை ஆணையம் அமைக்கப்படாது - அரசு

வெள்ளி, 5 ஜூன் 2009 (16:02 IST)
மும்பை தாக்குதல் நடைபெற்று 6 மாதங்களுக்குப் பிறகு விசாரணை ஆணையம் அமைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோருவது ஆச்சரியமளிப்பதாகவும், அதுபோன்ற விசாரணை ஆணையம் எதுவும் அமைக்கப்படாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

புதுடெல்லியில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று கூறினார்.

மும்பை தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மும்பை தாக்குதலைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அந்த தாக்குதல் தொடர்பான அனைத்து உண்மைகளும் நம்மிடம் உள்ளன என்றும் கூறிய ப. சிதம்பரம், அவற்றை எல்லாம் தாம் ஆய்வு செய்து எப்படி தாக்குதல் நடைபெற்றது என்பது தெளிவாக உள்ளது என்றார்.

மும்பை தாக்குதல் தொடர்பான விவரங்களை ஏற்கனவே அவையில் தாம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விசாரணை ஆணையம் எதையும் அமைத்ததா? அல்லது நாடாளுமன்றம் தாக்குதலுக்குள்ளான போது பாஜக தலைமையிலான அரசு அதுபற்றி விசாரிக்க ஆணையத்தை அமைத்ததா? என்று ப. சிதம்பரம் வினவினார்.

இதுபோன்ற கோரிக்கைகளால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை? என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்