கனரக ஆயுத பயன்பாட்டை சிறிலங்க இராணுவம் நிறுத்திவிட்டது: இந்தியத் தளபதி
புதன், 29 ஏப்ரல் 2009 (12:34 IST)
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கன ரக ஆயுதங்களை பயன்படுத்துவதை சிறிலங்க இராணுவம் நிறுத்திக் கொண்டுள்ளது என்று இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபக் கபூரிடம் இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“கனரக ஆயுதங்களை பயன்படுத்தவதை சிறிலங்க இராணுவம் குறைத்துக் கொண்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சற்றேறக்குறைய 6 கி.மீ. பரப்பளவு பகுதி உள்ளது. இந்த மிகச் சிறிய பகுதியில் விடுதலைப் புலிகளும் மக்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். கனரக ஆயுதங்களை பயன்படுத்தினால் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை சிறிலங்க அரசு நிறுத்திவிட்டது” என்று தீபக் கபூர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் இந்தியாவிற்குள் ஊடுறுவும் அபாயம் உள்ளதென செய்திகள் வந்துள்ளனவே என்று கேட்டதற்கு, “அப்படிப்பட்ட தகவல் எதுவும் என்னிடம் இல்லை, அது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவும் நான் விரும்பவில்லை” என்று தீபக் கபூர் பதிலளித்துள்ளார்.