டெல்லியில் ஆசிரியை அடித்ததால், மயக்கம் அடைந்த சிறுமி, சுயநினைவை இழந்து பின்னர் உயிரிழந்ததால், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை முதல் கோமா நிலையில் இருந்த 10 வயது சிறுமி, நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், ஆசிரியை மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
சிறுமி உயிரிழந்ததால், டெல்லியில் பெரும் பதற்றம் நிலவியது.
டெல்லி நகராட்சி சார்பில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி நரேலா பகுதியில் என்.டி தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்தவர் ஷானு கான்.
சிறுமி ஷானு சரியாகப் படிக்கவில்லை என்று கூறி வகுப்பு ஆசிரியை சிறுமியின் தலையில் அடித்ததுடன், சுமார் 2 மணி நேரம் வரை வெயிலில் நிற்க வைத்தாராம். வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம் அடைந்த சிறுமியை அவரது சகோதரி பார்த்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமியின் நிலைமை கவலைக்கிடமானதால், லோக் நாயக் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஷானு மாற்றப்பட்டார். என்றாலும், சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுமியை அடித்ததாகக் கூறி ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டார். பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.