வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கலகம் செய்து வருவதால், இந்தியாவின் கொல்கத்தா, அகர்த்தலா ஆகிய நகரங்களில் இருந்து டாக்காவுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை பயணிகள் நலன் கருதி காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அகர்த்தலா-டாக்கா, கொல்கத்தா-டாக்கா வழித் தடத்தில் பயணிகள் போக்குவரத்து காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திரிபுரா முதல்வர் மானிக் சர்க்கார் செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கலகம் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலை கவலை கொள்ளச் செய்கிறது. இதன் காரணமாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என்றார்.
இதற்கிடையில் மேற்குவங்கத்தில் உள்ள பெட்ராபோல் மற்றும் திரிபுராவில் உள்ள அக்ஹவ்ரா ஆகிய இடங்களில் உள்ள சாவடிகளிலும் வங்கதேசத்துடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுங்கவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை பேச்சாளர் ஏ.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.