பொருளாதார பின்னடைவை சாதமாக கையாள்கிறது ஐமு அரசு: பா.ஜ.க.

புதன், 25 பிப்ரவரி 2009 (18:37 IST)
ஆட்சியில் இருந்த 4 ஆண்டுகளில் தவறான நிதி ஆளுமையால் ஏற்பட்ட தோல்வியை மறைக்க உலகளாவிய பொருளாதார பின்னடைவை காரணமாக்குகிறது மன்மோகன் அரசு என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாற்றியுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையின் மீது விவாதத்தை துவக்கிவைத்து பேசிய பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் அருண் ஷோரி, 2009-10ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி காட்டியுள்ளது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்று குற்றம் சாற்றினார்.

கடந்த 4 ஆண்டுகளில் சமர்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகளில் உறுதியளிக்கப்பட்ட பலவற்றை அரசு நிறைவேற்றவில்லை என்று கூறிய அருண் ஷோரி, அதற்கு உதாரணமாக மும்மையை சர்வதேச வசதிகளுடன் கூடிய நகரமாக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது என்றும், ஆனால் உண்மையில் அதற்கு இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வெறும் ரூ.16 கோடிதான் என்று கூறினார்.

இதேபோல், 2005ஆம் ஆண்டில் தொடர்ந்து பெய்த மழையால் மித்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மும்பை நகரம் பாதிக்கப்பட்டதை நேற்று வந்த பார்த்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்த நதியின் கரையை பலப்படுத்தவும், ஆழப்படுத்தவும் ரூ.1,200 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தனர் என்றும், ஆனால் அவ்வாறு எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாற்றினார்.

ஆசியாவிலேயே பெரிய சேரிப் பகுதியாகத் திகழும் தாராவியை மேம்படுத்துவோம் என்று உறுதியளித்தனர், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. இன்று அதனை ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் காட்டி, எப்படி சாக்கடையும், குற்றச்செயலும் அங்கு பின்னிப் பிணைந்துள்ளது என்று காட்டியதை அங்குள்ள மக்கள் வரவேற்கின்றனர் என்று கூறினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுவரும் சுணக்கத்திற்கு உலகளாவிய பொருளாதார பின்னடைவை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது என்று கூறிய ஷோரி, தற்பொழுது நிலவும் எதிர்பாராத பொருளாதார சூழலை சமாளிக்க அதிகப்படியான நடவடிக்கைகள் அவசியம் என்று கூறிய அமைச்சர், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்த விதமான சலுகையும் அளிக்க இடமில்லை என்று தெரிந்தும், நிதி நிலை அறிக்கையை சமர்பித்தப் பின்னர் சேவை வரியையும், உற்பத்தித் தீர்வையையும் 2 விழுக்காடு குறைத்து அறிவித்தது எந்த அடிப்படையில் என்று கேள்வி எழுப்பினார் ஷோரி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் பெயரில் துவக்கப்பட்ட குடி நீர் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கிராமங்களுக்கு குடி நீர் வசதி அளிக்கப்பட்டதாக அரசு கூறியது. ஆனால், அரசு கூறிய அந்தக் கிராமங்களில் இப்போது குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்று இந்திய அரசின் தலைமை கணக்காளர் கூறியிருப்பதை அருண் ஷோரி சுட்டிக் காட்டினார்.

மன்மோகன் அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தேச கிராம வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், நமது நாட்டின் மொத்த கிராம மக்கள் தொகையில் 6 விழுக்காடினருக்கு மட்டுமே பயன் அளித்துள்ளது என்று தலைமை கணக்காளர் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரணாப் முகர்ஜி சமர்பித்த இடைக்கால அறிக்கையின் ஒரே நல்ல விடயம், இந்த அரசின் கடைசி நிதி நிலை அறிக்கை இதுவென்பதே என்று அருண் ஷோரி சாடினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்