மும்பையில் நட்சத்திர விடுதிகளில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாப் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்புலனாய்வு காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிகையை பதிவு செய்தனர்.
மூன்று நாட்கள் நீடித்த அந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது, வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 173 பேர் கொல்லப்பட்டனர்.
மும்பை பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எம்.ஜே. மிர்ஸா முன்னிலையில் காவல்துறையினர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அஜ்மல், இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கில் அஜ்மலுடன் கைது செய்யப்பட்டுள்ள பஹீம் அன்சாரி, சபவுதீன் அகமது ஆகிய இருவரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.