1,405 கைதிகள் விடுதலை ‌விவகார‌ம் : உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவு

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (11:35 IST)
அண்ணா பிறந்தநாளையொட்டி 1,405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மேலும் 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு, அண்ணா பிறந்த நாளன்று நன்னடைத்தை அடிப்படையில் 1,405 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ப.சதாசிவம் ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியசாமி நேரில் ஆஜராகி, தமிழக அரசு விடுதலை செய்த கைதிகளில் பலரும் சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் என்று குறிப்பிட்டார்.

கைதிகள் விடுதலை செய்யப்பட்டதில் சட்ட விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், அவர்களை கொண்டு பாராளுமன்ற தேர்தலின்போது சமூக விரோத செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மனு தொடர்பாக, தமிழக அரசு பதில் அளிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஏற்கனவே தா‌க்‌கீது அனுப்பி இருப்பதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் தனஞ்செயன் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக பதில் அளிக்க கூடுதலாக 4 வார கால அவகாசம் அளிக்கும்படி, அவர் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்று‌க் கொ‌ண்ட ‌நீ‌திப‌திக‌ள், தமிழக அரசு பதில் அளிக்க மேலும் 4 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்