கோத்ரா கலவரம் : காவல் அதிகாரி கொலைக் குற்றச்சாற்றில் கைது
திங்கள், 9 பிப்ரவரி 2009 (19:04 IST)
2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான வழக்கில், ஆதாரங்களை மறைத்தல், கடமை தவறுதல் ஆகியவை தவிரக் கொலையும் செய்துள்ளதாக வல்சாத் சரகக் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கே.ஜி. எட்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
2002 கோத்ரா இரயில் எரிப்பிற்குப் பிறகு குஜராத்தில் நடந்துள்ள கலவரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இன்று எட்ரா-வைக் கைது செய்து பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி.பி. பட்டீல் முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது எட்ராவை பிப்ரவரி 13 வரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் நடந்த கலவரங்களின்போது மேகானிநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய எட்ரா, காங்கிரஸ் கட்சியின் முன்னால் எம்.பி. ஏசன் ஜாஃபெரி உள்ளிட்ட 38 உயிர்களைப் பலிகொண்ட குல்பார்க் சொசைட்டி மீதான கொடூரத் தாக்குதல்கள் தொடர்பாக நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கோத்ரா கலவர வழக்குகளை மீண்டும் விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதகிளில் பணியாற்றிய சில முக்கியக் காவல்துறை அதிகாரிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.