தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது: பிரணாப் வற்புறுத்தல்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (09:48 IST)
இலங்கையில், போர் நடைபெறும் பகுதியில் சிக்கி இருக்கும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இலங்கை அரசை மத்திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

புதுடெ‌ல்‌லி‌‌யி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி பேசுகை‌யி‌ல், தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது எங்களுக்கு எந்த வித இரக்கமும் கிடையாது. அவர்களை ஆதரிக்க முடியாது. இங்கும் (இந்தியா), இலங்கையிலும், பல்வேறு உலக நாடுகளிலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கு இடையே போர் முனையில் சிக்கி உள்ள 2 லட்சம் அப்பாவி தமிழர்கள் மீது நாங்கள் இரக்கப்படுகிறோம்.

விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் இடையே வேறுபாட்டை கண்டு கொள்ள வேண்டும் என தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் நான் இலங்கை சென்று வந்த பிறகு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அப்பாவி மக்கள் வருவதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

அந்த பகுதியில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம். போர் முனையில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்குமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்துகிறது.

விடுதலைப்புலிகளையும், அப்பாவி தமிழர்களையும் தயவு செய்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வரும் மக்களுக்கு தங்கும் இடம், உணவு, மருந்து, அடிப்படை வசதிகள் உள்பட மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மக்கள் வருவதற்கு விடுதலைப்புலிகளும் ஒத்துழைக்க வேண்டும். 1987-ம் ஆண்டு ராஜீவ்காந்தி ஆட்சியின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு அமல் படுத்த வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் படி, மாகாணங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் ஜனநாயகம் திரும்புவதுடன் அங்கு மறு கட்டமைப்பு பணிகளும் சீக்கிரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்