பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்பு செயல்படுகிறது: ராணுவத் தளபதி
சனி, 7 பிப்ரவரி 2009 (13:48 IST)
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்பு செயல்பாட்டில் உள்ளதாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்துள்ளார். தற்போதைய கணிப்பின்படி அந்நாட்டில் 30 முதல் 50 பயங்கரவாத முகாம்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பயங்கரவாத கட்டமைப்புகள், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது போல் பாகிஸ்தானின் செயல்பாடுகள் தோன்றினாலும், அந்நாட்டின் பயங்கரவாதக் கட்டமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு 10 முதல் 50 கி.மீ தொலைவிற்குள் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றின் எண்ணிக்கை 30 முதல் 50க்குள் இருக்கலாம் என்றும் கூறிய ஜெனரல் தீபக் கபூர், முகாம்களின் எண்ணிக்கை காலத்திற்கு ஏற்ப அதிகரித்தும், குறைந்தும் வருவதாகத் தெரிவித்தார்.
தற்போது அந்நாட்டில் எத்தனை பயங்கரவாத முகாம்கள் என்று தன்னால் குறிப்பிட்டு கூற முடியாவிட்டாலும், பயங்கரவாதக் கட்டமைப்புகள் செயல்பாட்டில் உள்ளது என்பதை மட்டும் உறுதிபடக் கூற முடியும் எனக் கூறியுள்ளார்.