லாகூரில் இந்திய பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:12 IST)
இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியின் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் லாகூரில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முகவர்களால் தாக்கப்பட்டுள்ளதற்கு இந்திய அயலுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக லாகூரில் செய்தி திரட்டச் சென்ற நியூஸ் எக்ஸ் ஆங்கில தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜூஜ்ஜார் சிங், ஒளிப்பதிவாளர் திலக் ராஜ் ஆகிய இருவரும் ஐ.எஸ்.ஐ. முகவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அத்துமீறலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த ஒளிப்பதிவுக் கருவி பறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ், இந்திய பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அத்துமீறல் துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
“பாகிஸ்தானில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆலோசனை இன்னமும் நடைமுறையில் உள்ளது. பாகிஸ்தானிற்கு பயணம் செல்வது இந்திய குடிகளுக்கு பாதுகாப்பானதல்ல என்று மீண்டும் கூறிக்கொள்கிறோம்” என்று விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
இந்திய பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அத்துமீறல் குறித்து பாகிஸ்தான் அரசிற்கு இந்திய தூதரகம் புகார் அளித்துள்ளது.
தங்களுடைய செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரிடமிருந்து ஒளிப்பதிவு கருவி, பதிவு செய்யப்பட்ட ஒளிநாடா, செல்பேசி, பணப்பை ஆகியவற்றை ஐ.எஸ்.ஐ. முகவர்கள் பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளதாக நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் அரூப் கோஷ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.