மும்பை தாக்குதல் : பான் கி- மூனிடம் பிரணாப் விளக்கம்
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:07 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்புள்ளது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி- மூனிடம் விளக்கிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்து வரும் நீடித்த வளர்ச்சிக்கான கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள பான் கி- மூன் நேற்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். இருவரும் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
அப்போது, கடந்த ஆண்டு நவம்பர் 26 இல் இருந்து மூன்று நாட்கள் தங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களால் மும்பையைச் செயலிழக்க வைத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கர ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதிகள் 10 பேரும் எப்படிக் கராச்சியில் இருந்து கடல் வழியாக வந்தனர் என்பது குறித்து பிரணாப் முகர்ஜி விரிவாக விளக்கியதாகத் தெரிகிறது.
மேலும், இந்தத் தாக்குதல்கள் எவ்வாறு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு அந்நாட்டு சக்திகளால் இங்கு நடத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவிடம் உள்ள மறுக்க முடியாத ஆதாரங்களையும் பான் கி-மூனிடம் பிரணாப் முகர்ஜி வழங்கியிருக்கிறார்.
இந்த ஆதாரங்கள் ஏற்கெனவே பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுள்ளதும், அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்துக் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பைத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சக்திகளைக் கைது செய்து அவர்களை நீதியின் முன்பு நிறுத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று வற்புறுத்துமாறு பான் கி- மூனிடம் பிரணாப் வலியுறுத்தியுள்ளார் என்றும் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதப் பயணத்திற்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ள பான் கி-மூன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து மண்டல விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.