புலிகள் ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்: சிதம்பரம்

வியாழன், 5 பிப்ரவரி 2009 (16:33 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிதம்பரம், “விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட மறுப்பதால் போரை நிறுத்துமாறு ஒரு அளவிற்கு மேல் சிறிலங்க அரசை எங்களால் வலியுறுத்த முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை சம்மதிக்க வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றோம், ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்று கூறிய சிதம்பரம், “இன்னமும் எந்தப் பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை” என்று கூறினார்.

சிறிலங்க அரசு தாக்குதலை தொடர்ந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை, அதே நேரத்தில் அதற்கு முடிவுகட்ட ஒரே வழி இரு தரப்பும் எங்கள் வேண்டுகோளை ஏற்க வேண்டும் என்பதே என்று கூறியுள்ளார்.

தமிழர்களோ அல்லது மற்றவர்களோ யாராக இருந்தாலும், உயிரிழப்பு ஆழந்த கவலையைத் தருகிறது, எங்களால் முடிந்ததை செய்துக் கொண்டிருக்கின்றோம் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்