மியான்மர் சென்றார் ஹமீது அன்சாரி

வியாழன், 5 பிப்ரவரி 2009 (11:56 IST)
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 4 நாள் பயணமாக இன்று மியான்மர் புறப்பட்டுச் சென்றார்.

இந்தியாவுக்கும், மியான்மருக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே குடியரசு துணைத் தலைவரின் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இருநாடுகளுக்கும் இடையே எல்லை வர்த்தகத்தில் இருந்து வழக்கமான வர்த்தகமாக மேம்படுத்துவது, புதிய வழித்தடங்களை திறப்பது உள்ளிட்ட 3 ஒப்பந்தங்களில் ஹமீது அன்சாரி கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

வரலாற்றுச் சிறப்பு மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகளில் இரு நாடுகளும் அதிகளவு ஒருமித்த உடன்பாட்டைக் கொண்டுள்ள வேளையில் அன்சாரியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

மியான்மர் சென்றுள்ள குடியரசுத் துணைத் தலைவருடன் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ மற்றும் எம்பிக்கள், வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் சென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்