நமது ஒற்றுமையை பாகிஸ்தான் விரும்பவில்லை : சோனியா
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:38 IST)
நமது ஒற்றுமையை நமது அண்டை நாட்டினர் சிலர் (பாகிஸ்தான் உள்பட) விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி குற்றம்சாற்றினார்.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பேசிய அவர், "நமது தேச ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் ஒளிர்வதை நமது அண்டை நாட்டினர் சிலர் விரும்பவில்லை. நாம் பிரிந்து பலவீனமடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை" என்றார்.
"நமது ஒற்றுமையை விரும்பாத சக்திகளின் தீய நோக்கங்களை எப்போதும் ஒற்றுமையாக இருந்து நமது நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும். தீய சக்திகளின் திட்டங்கள் வெற்றியடைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நமது தேச ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் யாராலும், எந்தப் படையாலும் உடைக்க முடியாது. நமது தலைவர்கள்- மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி- இந்த நாட்டிற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்து உள்ளனர். அதைக் கருதி, தீய சக்திகளை நிச்சயம் நாம் தோற்கடிக்க வேண்டும்" என்றார் சோனியா.