பாக். பயங்கரவாதத்தை உலக நாடுகள் எதிர்க்க வேண்டும்-இந்தியா
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (12:55 IST)
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களை உலக நாடுகள் உறுதியுடன் எதிர்க்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அந்நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்தக் கொடுஞ்செயல்களை வேரறுப்பதில் அனைத்து உலக நாடுகளுக்கும் சம உரிமை உள்ளதாக அவர் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான அணுகுமுறையை உலக நாடுகள் எடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் ஆண்டனி கூறினார்.
மேலும் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றார் அவர்.
இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக குறைந்துள்ளது என்றாலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்றார்.
பயங்கரவாதத்தின் தோற்றுவிக்கும் மையமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் ஆண்டனி குற்றஞ்சாட்டினார்.
மும்பை தாக்குதல் உள்ளிட்ட அதற்கு முன் நாட்டின் பல நகரங்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால், கடந்த சில ஆண்டுகளாக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.