முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தெல்கிக்கு 5 ஆண்டு ‌சிறை

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (10:58 IST)
பல கோடி ரூபாய் அளவில் நடந்த போலி முத்திரைத்தாள் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி முத்திரைத் தாள் தயாரித்தது, அவற்றை பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகித்தது ஆகிய குற்றச்சாற்றுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தெல்கி மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் சில வழக்குகளில் குற்றச்சாற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மும்பை ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

தெல்கி மீது தொடுக்கப்பட்ட 9 வழக்குகளில், எட்டு போலி முத்திரைத்தாள் தொடர்பானவை. மீதமுள்ள ஒரு வழக்கு போலி விசா தயாரித்தது தொடர்பானது. இவற்றில் 6 வழக்குகளை காவல்துறையினரும், 3 வழக்குகளை சி.பி.ஐ.யும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தெல்கி மீதுள்ள சில வழக்குகள் (முத்திரைத்தாள் மோசடி தொடர்பானதே) மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குகளில் தெல்கிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.85 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி சி.கே.பேடி தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து போலி முத்திரைத்தாள் தயாரித்தது, வினியோகித்தது ஆகிய குற்றங்களுக்காக ஏரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தெல்கி, தாம் எய்ட்ஸ் நோயாளி என்பதால் தனக்கு கருணை காட்ட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.

முத்திரைத்த்தாள் மோசடியில் தெல்கியுடன் தொடர்புடைய 11 பேருக்கும் ஏற்கனவே 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்