அஜ்மல் காவல் பிப்.13 வரை நீட்டிப்பு
திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:11 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் காவல்துறை காவலை- குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகின் ஓட்டுநரைக் கொன்ற வழக்கில்- பிப்ரவரி 13 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பற்றிய வழக்கில் அஜ்மல் கசாப்பிற்கு வழங்கப்பட்ட காவல்துறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தததை அடுத்து, அவர் மும்பை பெருநகரக் குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் நீதிபதி என்.ஸ்ரீமங்கலே முன்பு நிறுத்தப்பட்டார்.
அப்போது, குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகின் ஓட்டுநரைக் கொன்ற வழக்கில் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால் அஜ்மலிற்கு காவலை நீட்டிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அஜ்மலை பிப்ரவரி 13 வரை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் தமால், காவலர்களின் மீது ஏதாவது புகார் உள்ளதா என்று அஜ்மலிடம் நீதிபதி கேட்டதாகவும், அதற்கு அஜ்மல் எந்தப் புகாரும் இல்லை என்று தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
கராச்சியில் இருந்து கப்பலில் வந்த பயங்கரவாதிகள் 10 பேரும், குஜராத் அருகில் மீன்பிடி படகு ஒன்றில் ஏறி- அதன் ஓட்டுநர் அஜய் சிங் சொலான்கி என்பவரைக் கொன்றுவிட்டு- மும்பை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.