சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்கள் மீது நடவடிக்கை: இந்தியா
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:00 IST)
முறையான விசாக்களுடன் இந்தியாவிற்கு வரும் வங்கதேசத்தவர்களில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 பேர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் தாய் நாட்டிற்கு திரும்புவதில்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாக எச்சரித்துள்ளது.
இந்தியாவிற்கு வரும் வங்கதேசத்தவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி இங்கே தங்குவதைத் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தொடர்பாக அயலுறவு அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை உறுதிசெய்துள்ள அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், "வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து செல்பவர்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் எங்களுக்கு உள்ள முக்கியப் பிரச்சனை ஆகும்" என்றார். சாலை மார்க்கமாக வருபவர்களைக் கண்காணிப்பதற்கு முறையான கடுமையான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அயல்நாட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வங்கதேசத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இதற்கு ஆவணப்பூர்வமான ஆதாரங்களைத் தேடுவது கடினம். மாநிலங்களவை கேள்வி பதில்களின் அடிப்படையில், 2004இல் இந்தியாவிற்கு வந்துள்ள 62,998 அயல்நாட்டவர்களில் 35,000 பேர் இன்னும் திரும்பவில்லை.
உலகளவில் விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் இந்தியத் தூதரகங்களில் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம்தான் மிகவும் பரபரப்பான தூதரகம் என்று சொல்லப்படுவது உண்டு. வங்கதேசத்தவரிடம் இருந்து ஒவ்வொரு நாளும் 2,000 முதல் 3,000 வரையிலான விசா விண்ணப்பங்களை இந்தியா பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 50,000க்கும் அதிகம். இதில் சுமார் 25,000 பேர் விசாக்காலம் முடிந்தும் திரும்புவதில்லை.
இந்தப் போக்கு கடந்த 4 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2005 இல் மட்டும் 45,640 வங்கதேசத்தவருக்கு விசா வழங்கப்பட்டது. இதில் 12, 338 பேர் இங்கேயே தங்கிவிட்டனர். இதுவே 2006இல் இரண்டு மடங்காக உயர்ந்து 24,497 ஆனது. 2007இல் 50,234 பேர் இந்தியாவிற்கு வந்தனர். இதில் 25,712 பேர் இன்னும் தங்கள் நாட்டிற்குத் திரும்பவே இல்லை.
எல்லைகளில் மின்வெட்டே காரணம்!
இந்தியாவிற்கு வரும் வங்கதேசத்தவர்களில் 90 விழுக்காட்டினர் தரை வழியாகவே வருகின்றனர். இவர்களைக் கண்காணித்து ஆவணங்களைச் சோதித்து அனுப்ப எல்லைக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கம்ப்யூட்டர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், அவை பெரும்பாலும் இயங்குவதே இல்லை என்று கூறப்படுகிறது.
எல்லைகளில் தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பது அரிதாக உள்ளது. வனப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு காரணமாக ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதில்லை. இதுவும் பிரச்சனைக்கு முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான அயல்நாட்டவர்கள் வர்த்தக விசாக்கள், சுற்றுலா விசாக்கள் மூலம்தான் இந்தியாவிற்கு வருகின்றனர். அவர்கள் உரிய காலத்தில் திரும்பிச் செல்கின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்கு உரிய அமைப்புகள் இல்லை. இதுவும் பிரச்சனைக்குக் காரணம் ஆகும்.
இந்நிலையில், இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் முனைந்துள்ளது. இதற்காக அயலுறவு அமைச்சகத்திடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. அயலுறவு அமைச்சகத்தை வலுப்படுத்தவும், பாதுகாப்பு அமைச்சகத்தோடு இணைந்து கண்காணிப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானியர்களைக் கண்காணிக்கும் விதத்தில் வங்கதேசத்தவர்களையும் கண்காணிப்பது நோக்கி நாங்கள் மெதுவாக நகர்ந்து வருகிறோம் என்று அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.