பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மேலும் ஆவணங்களை அளிக்கத் தயார் என்று இந்தியா கூறியுள்ளது.
புதுடெல்லியில் நேற்று அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நட்சத்திர விடுதிகளிலும், ரயில் நிலையத்திலும் புகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வெளிநாட்டவர் சுமார் 180 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயங்கரவாதியான கஸாப் மட்டுமே உயிருடன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா மேலும் சில தகவல்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு விசாரணைக்குத் தேவை என்று கேட்கும்பட்சத்தில் இந்தியாவிடம் உள்ள ஆவணங்களை அளிக்கத் தயார் என்றும் கூறினார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அந்நாடு நடத்தி வரும் விசாரணை அறிக்கை எதையும் இந்தியாவிடம் அளிக்கவில்லை என்று கூறிய அவர், ஊடகங்களில் பாகிஸ்தானின் விசாரணை குறித்து பல தகவல்கள் வெளிவருகின்றன என்றார்.
பிரணாப்பின் இந்த அறிவிப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனின் பேட்டிக்கு முரணாக உள்ளது.
இந்திய ஆவணங்கள் குறித்து பாகிஸ்தான் இரு பிரிவுகளாக கேள்விகளை அனுப்பியிருப்பதாக நாராயணன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இதற்கு இந்தியா ஏற்கனவே பதில் அளித்துள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்தியா அதிகாரப்பூர்வமாக அனுப்பிய ஆவணங்களுக்கு பாகிஸ்தான் பதில் ஏதும் தரவில்லை என்று பிரணாப் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்யரீதியான உறவுகள் நீடிக்கும் நிலையில், தூதரகம் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.