இஸ்ரோ ஏவிய ஐரோப்பிய செயற்கைக்கோள் செயலிழந்தது
ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (10:36 IST)
ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் ஏவிய தகவல் தொடர்பு தெயற்கைக்கோள் W2M, அதன் மின்கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டதால், ஏவப்பட்டு 6 வாரங்களுக்குள் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது.
இந்தத் தோல்வி இஸ்ரோவிற்கு ஒரு பின்னடைவு என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து, இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதிப்பு தீவிரமானது. இதைச் சரி செய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.எங்களுக்கு ஏறக்குறைய நம்பிக்கை போய்விட்டது. பாதிப்பில் இருந்து செயற்கைக்கோள் மீண்டு வருவதற்கான வாய்ப்பு 10 விழுக்காடு மட்டுமே உள்ளது" என்றார்.
W2M செயற்கைக்கோள் யூடெல்சாட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்திற்காக ஐரோப்பாவின் EADS நிறுவனத்தின் பங்களிப்புடன் வர்த்தக அடிப்படையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது ஆகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், அதன் மின்கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பினால், அதன் தயாரிப்பாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று யூடெல்சாட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள W2M செயற்கைக்கோளின் தோல்வி குறித்து முழு அளவிலான தொழில்நுட்ப விசாரணை நடந்து வருகிறது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
"W2M செயற்கைக்கோளின் தோல்வி யூடெல்சாட் நிறுவனத்திற்கு கடுமையான அதிருப்தியைத் தந்துள்ளது" என்று யூடெல்சாட் நிறுவனத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான கிலியானோ பெரெட்டா கூறியுள்ளார்.
W2M செயற்கைக்கோள் யூரோப்பியன் ஏரியேன்-5 செலுத்து வாகனம் மூலம் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கயானா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.