மும்பை: பாகிஸ்தானிடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் இல்லை- பிரணாப்
சனி, 31 ஜனவரி 2009 (16:09 IST)
மும்பைத் தாக்குதல் விசாரணை தொடர்பாகப் புதிய தகவல் ஒன்று இந்தியாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கூறியுள்ளதை மறுத்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பாகிஸ்தான் நடத்தி வரும் விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல் ஒன்றை பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தபோது கொடுத்துள்ளார் என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று தெரிவித்திருந்தார்.
இதை மறுத்து பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 29ஆம் தேதி பாகிஸ்தான் தூதர் அரசு முறைக்காக உள்துறை அமைச்சரைச் சந்தித்தார். ஆனால், மும்பைத் தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் நடத்தி வரும் விசாரணை தொடர்பாக அவர் தகவல் எதையும் தரவில்லை என்று கூறியுள்ளார்.
நடந்து வரும் விசாரணைகள் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் விடுக்கும் அறிக்கைகள், அவை தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் அளிக்கும் விளக்கங்கள் ஆகியவற்றை ஊடகங்களின் மூலமாகவே நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "மும்பை தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா கொடுத்துள்ள ஆதாரங்களுக்குப் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பதில், பாகிஸ்தான் அரசு நடத்தி வரும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை பற்றிய தகவல்கள் ஆகியவை இன்னும் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. அவற்றிற்காக நாம் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்" என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.